இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆஸ்தான ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை சிறுமி ஒருவர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மொத்த கிரிக்கெட் உலகமும் தோனி மீண்டும் பேட்டை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் காட்சியைப் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல் தொடருக்காக தோனியின் ரசிகர்கள் பலர் காத்திருக்கும் நேரத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஹரியாணாவைச் சேர்ந்த பரி சர்மா என்ற 7 வயது சிறுமி அச்சு அசலாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்கிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகவேண்டும் என்ற கனவோடு பயிற்சி செய்துவரும் பரி சர்மாவுக்கு அவரது தந்தையே பயிற்சியாளராக உள்ளார். அவரது தந்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஜய் ரத்ரா மற்றும் ஜோகிந்தர் சர்மா உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரி சர்மா ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் அந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே பரி சர்மா பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரானது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் நாசர் உசேன், மைக்கெல் வான் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.