சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது ஈரான், இத்தாலி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனோ வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து மக்கள் வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
விசாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா என ரசிகர்களிடயே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் எளிதில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதையடுத்து ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், பார்வையாளர்கள் இன்றி, ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாளை நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது சாத்தியமா, அப்படி ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தும் பட்சத்தில் மைதான அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டுப் போட்டிகள், மாநாடு, கருத்தரங்கம் நடத்த டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
இதனால், ஐ.பி.எல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளும் ஐ.பி.எல் தொடரை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பையில் நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியின் டிக்கெட் விற்பனைக்கு மஹாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.