கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் திட்டமிட்டபடி சில விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளதால் இங்கும் விளையாட்டு போட்டிகள் தடைபடும் நிலை உருவாகியுள்ளது. அவ்வகையில், ISL கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (மார்ச் 14) கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை-கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன. கொரோனா அச்சுறுத்தலால், இந்த போட்டி ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.எஸ்.எல் நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்கள் இன்றி இறுதிப்போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள ஐ.எஸ்.எல் நிர்வாகம், ரசிகர்களின் உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.