விளையாட்டு

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு : ட்விட்டரில் உருக்கம்!

முதல்தர மற்றும் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார். 

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு : ட்விட்டரில் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா. 2008 ஜூன் 28ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக காலடி பதித்தார்.

இந்திய அணிக்காக இதுவரை 24 டெஸ்ட், 18 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்யான் ஓஜா, மொத்தம் 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல், 108 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 424 விக்கெட்டுகளையும் அள்ளியுள்ளார்.

இளம் வீரர்களின் வருகை, அணியில் மாற்றம் என நிறைய நிகழ்ந்ததால், பிரக்யான் ஓஜ-வுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இறுதியாக சர்வதேச அரங்கில் 2013 வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ‘மாஸ்டர் ப்ளாஸ்டர்’ சச்சின் விளையாடிய கடைசி போட்டியே, பிரக்யான் ஓஜாவுக்கும் கடைசி போட்டியாக அமைந்தது.

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு அறிவிப்பு : ட்விட்டரில் உருக்கம்!

முதல் தர கிரிக்கெட் தொடரில் கடைசியாக நவம்பர் 2018 வரை விளையாடியுள்ள ஓஜா, அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். முதல்தர மற்றும் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஓய்வு குறித்து மேலும் பதிவிட்டுள்ள 33 வயதான ஓஜா, ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தை தொடங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ஓஜா, அனைத்து தருணங்களிலும் தன்னுடைய வெற்றிக்கு ஆதரவாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

அறிமுக டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்தியர், ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கு வழங்கப்படும் பர்ப்பிள் நிற தொப்பியை வென்ற முதல் சுழற்பந்து வீரர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் பிரக்யான் ஓஜா.

2013-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஓஜா ஆட்டநாயகன் விருது வென்றது நினைவுகூரத்தக்கது.

- மீனா, செய்தியாளர்

banner

Related Stories

Related Stories