நியூசிலாந்து சென்று 3வித தொடர்களிலும் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி நாளை ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் ஆக்லாந்தில் இருந்து ஹாமில்டனுக்கு பேருந்தில் பயணித்தனர்.
பயணத்தின் போது, பந்து வீச்சாளர் சஹால், சக அணி வீரர்களிடம் பேசி கிண்டலடித்து கொண்டே பயணம் செய்தார். ஒவ்வொரு வீரரிடமும் பயணம் குறித்தும், போட்டி குறித்தும் பேசி மகிழ்ந்த சஹால், தோனி குறித்தும் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டனான தோனி, கடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதியுடன் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. தோனி, இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா? விளையாடுவாரா என்ற ரசிகர்களின் கேள்விக்கு, ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டம்தான் அதனை முடிவு செய்யும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய வீரர்களின் இந்த பயணத்தில் பேருந்தின் கடைசி இருக்கையை காண்பித்து, இந்த கடைசி வரிசையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கையில் மற்ற வீரர்கள் யாரும் அமர மாட்டோம். அது தோனியின் இடம், அவர் மட்டுமே அங்கு உட்காருவார் என கூறிய சஹால், அணியினர் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் உணர்ச்சிப்பொங்க குறிப்பிட்டார்.
பிசிசிஐ தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் சஹால் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் தோனி மீண்டும் அணிக்கு திரும்பி விளையாட வேண்டும் என்ற ஏக்கத்துடன் உள்ளனர். தோனியை உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மைதானத்தில் பேட் உடன் பார்க்காத ரசிகர்களுக்கு, ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் தருணத்தை பார்ப்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கும் என்றே சொல்லலாம்.