கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்த பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருந்தது. அதில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.சி.சி வெளியிட்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 535 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் இரண்டாவது இடத்திலும், 525 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஷ்வின், டெஸ்ட், T20, ஒருநாள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபித்து வந்தார். பல மைல்கற்களை மிகவிரைவாகக் கடந்துவந்த அஷ்வின் தற்போது இந்த சாதனைக்கு உரியவராகியிருக்கிறார்.
ஆனால், சமீபகாலமாக ஒருநாள், T20 அணிகளில் அஷ்வினுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெற்று வரும் அஷ்வினுக்கு, வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்டுகளில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
இந்நிலையில், அஷ்வினின் சாதனையை பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார். இதுகுறித்து, கங்குலி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். அருமையான சாதனை. நினைக்கவே பெருமையாக இருக்கிறது.” எனப் பாராட்டியதோடு, ”இதுபோன்ற சாதனைகள் சிலநேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது" என தனது வேதனையையும் பதிவு செய்துள்ளார்.