கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து நேற்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான தோனி, கடந்த 15 ஆண்டுகளில் தன் சிறப்பான பங்களிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாகச் செயல்பட்டிருக்கிறார் தோனி. கேப்டனாக இந்திய அணிக்கு 2007ல் T20 உலகக் கோப்பை, 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு சென்றார். இதுதவிர ஐ.பி.எல் T20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறையும் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
தோனி இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டி, 90 டெஸ்ட், 98 T20 ஆட்டங்களில் விளையாடி 17,266 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 839 வீரர்களை வெளியேற்றியுள்ளார்.
‘ஃபினிஷர்’ எனக் கொண்டாடப்படும் தோனி, எத்தகைய தருணத்திலும் நிதானத்தை இழக்காமல் கூலாக நின்று களத்தில் மட்டையைச் சுழற்றுபவர். அதனாலேயே, ‘கூல் கேப்டன்’ என சக வீரர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர்.
தோனியின் 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வையொட்டி #15yearsOfDhonism என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. ரசிகர்கள் பலர் தோனியின் சிறப்பான இன்னிங்ஸ்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.