கால்பந்து அரங்கில் உலகக்கோப்பைக்கு அடுத்ததாக, மிகப்பெரிய போட்டியாக வர்ணிக்கப்படுவது யூரோ கோப்பை கால்பந்து தொடர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் 16வது முறையாக அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை 12 நாடுகளில் களைகட்டவுள்ளது. கடைசியாக 2016ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 55 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதிலிருந்து 24 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்று விளையாடும். இந்த முறை இந்த போட்டியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது முதல் முறையாக 12 நாடுகள் இந்தப்போட்டியை நடத்துவது தான்.
இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில், துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து அணிகளும், பி பிரிவில் டென்மார்க், ஃபின்லாந்து, பெல்ஜியம் ரஷ்ய அணிகளும், சி பிரிவில் நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரிய அணிகளும், டி பிரிவில் இங்கிலாந்து, குரேஷியா, செக்குடியரசு அணிகளும், இ பிரிவில் ஸ்பெயின், ஸ்வீடன், போலந்து அணிகளும், எஃப் பிரிவில் நடப்புச்சாம்பியன் போர்ச்சுக்கல், ஃப்ரான்சு, ஜெர்மனி அணிகளும் இடம் பெற்றுள்ளன.
எஞ்சிய அணிகள் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றில் இந்த அணிகளோடு இடம் பெறவுள்ளன. இந்த அட்டவணையில், குரூப் எஃப் பிரிவு அட்டவணையே மிகவும் கடினமானதாகவும், அதே சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளாக இருக்கும் எனவும் பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
குரூப் எஃப் பிரிவை பொறுத்தவரை நடப்பு சாம்பியன் போர்ச்சுக்கல், 2014 உலக சாம்பியன் ஜெர்மனி, 2018 உலக சாம்பியன் ஃப்ரான்சு ஆகிய அணிகள் உள்ளன. உலக கால்பந்து அரங்கில் மிகப்பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் இந்த அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்திருப்பது சற்று சவாலானதாகவே அமைந்துள்ளது.
ஜெர்மனி அணி விளையாடும் அனைத்து லீக் ஆட்டங்களிலும் சொந்த நகரில் உள்ள முனிச் மைதானத்தில் நடைபெறுவதால் ஜெர்மனி அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என அணியின் தலைமை பயிற்சியாளர் Joachim Loew, அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், 2016 யூரோ கோப்பை தொடரில் அரையிறுதியில் ஃப்ரான்சிடம் ஜெர்மனி அணி தோற்றது. அந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க ஜெர்மனி அணிக்கு சரியான வாய்ப்பாகவும் இந்த டிரா அமைந்திருப்பதாக, அந்த அணியினர் கருதுகின்றனர். இதேபோல், டி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-செக்குடியரசு அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடின. அதில் 5-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள குரேஷிய அணிக்கும் இங்கிலாந்து இந்த முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. 2018 உலகக்கோப்பை அரையிறுதியில் குரேஷியாவிடம் தோற்ற இங்கிலாந்து அணி, அதற்கான பழிகணக்கை தொடக்க ஆட்டத்திலேயே தீர்த்துக்கட்ட காத்திருக்கிறது.
உலகின் தலை சிறந்த அணிகள், தலைசிறந்த வீரர்கள் என ஒரு மாதம் களைகட்டவுள்ள இந்த யூரோ கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 12ஆம் தேதி லண்டனில் அரங்கேறவுள்ளது.