தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ். 2014ம் ஆண்டு காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் ஐ.பி.எல் தொடரில் 2008 முதல் 2014 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர் சிறிது காலம் கொல்கத்தா அணிக்காக பயிற்சியாளராகவும் இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதளங்களில் அரை மீசை, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். எதற்காக காலிஸ் இவ்வாறு பதிவிட்டு வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வுக்காக நிதி திரட்ட அவர் தனது தோற்றத்தை இவ்வாறு மாற்றியுள்ளார். மேலும் இதற்காக அவர் நிதி கொடுத்தும் உள்ளார்.
உலகில் உள்ள காண்டாமிருங்களில் 80 சதவீதம் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளது. ஆனால், சமீபகாலமாக காண்டமிருங்கள் இனம் அழிவை நோக்கிச் செல்வதால் அவற்றைப் பாதுகாக்க ''Save The Rhino'' என்ற விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலிஸின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று இந்திய வீரர் ரோஹித் சர்மா, முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோரும் காண்டாமிருகங்களை காப்பாற்றும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.