பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவாக நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 2 விக்கெட்டுகளை விழுந்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் சுமித் அடுத்து களம் இறங்கினார். 36 ரன்களில் ஆட்டமிழந்த ஸ்டீவ் சுமித் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை விரைவாகக் கடந்த முதல் வீரர் என்ற 73 ஆண்டுகால சாதனையை படைத்தார்.
மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், பவுண்டரிகளை அள்ளி இறைத்தார். அசுர வேட்டை ஆடிய வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் முச்சதத்தை ருசித்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தார். 389 பந்துகளை சந்தித்து 37 பவுண்டரியுடன் 300 ரன்களை குவித்து அசத்தினார் டேவிட் வார்னர்.
கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா சார்பாக முச்சதம் அடிக்கும் 7வது வீரர் வார்னர் ஆவார். தவிர, பாகிஸ்தான் அணிக்கு எதிராக முச்சதம் விளாசிய 4வது வீரரும் கூட. இதற்கு முன்பு 2015ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 253 ரன் குவித்ததே வார்னரின் அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கை ஆகும்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்த அதிரடி மன்னன் வார்னருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. வார்னரின் முச்சதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை 589 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.