இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய இராணுவத்தில் அவர் பயிற்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரிலும் தோனி பங்குபெறவில்லை. தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ள ஆசியா XI மற்றும் உலக நாடுகள் XI போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் அணி தங்கள் நாட்டில் இரு டி20 போட்டிகளை நடத்துகிறது. ஆசிய லெவன் வீரர்கள் மற்றும் உலக லெவன் வீரர்களுக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இருந்து 7 வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ அமைப்பிடம் கேட்டுள்ளது.
அதில் முதல் வீரர் தோனி. அதன்பின் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜடேஜா ஆகியோரை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்றுக்கொண்டால் அந்தப் போட்டிகளில் தோனி விளையாடுவார். தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.