இந்திய கிரிக்கெட் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்காத அதிருப்தியில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உணர்ச்சி வேகத்திலும் அவசரத்திலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தான் முடிவெடுத்ததாக கூறிய அம்பத்தி ராயுடு உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக விளையாடினார்.
அதேபோல,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடருக்கான அணியில் அவரை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அம்பத்தி ராயுடு தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராயுடு அமைச்சர் ஒருவருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழலை சரி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஊழல் நிறைந்த நபர்களின் தாக்கத்தினால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும், அவர்கள் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் உள்ளன, ஆனால் அவை மறைக்கப்படுகின்றன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் ராயுடு கூறுகையில், ஐதராபாத் அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் இப்போது ஐதராபாத் கிரிக்கெட் அணிக்காக விளையாட மாட்டேன். ஏனெனில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் அதிகப்படியான அரசியலும் ஊழலும் நிறைந்துள்ளது.
இது குறித்து தலைவர் அசாருதீனிடம் விவாதித்தேன். அவரும் உரிய முயற்சிகளை எடுப்பதாக அவர் கூறினார். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப் படுகின்றன. இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக உள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “ராயுடு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்; அதனால் இவ்வாறு கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.