எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மீது விமர்சனம் எழுப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் என்ஜினீயர், ‘‘இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது தேர்வுக்குழுவினர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்து வரும் வேலையைத்தான் செய்தார்கள்'' எனத் தெரிவித்தார்.
பரூக் இன்ஜினியரின் இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பரூக் என்ஜினியரின் இந்த கருத்துக்கு அனுஷ்கா சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்தேன். அப்போது ஃபேமிலி பாக்ஸில் உட்கார்ந்து போட்டியை பார்த்தேன். தேர்வாளர்கள் இருக்கும் பகுதியில் நான் இருக்கவில்லை.
இப்படி இருக்கும்போது, நீங்கள் உண்மையான செய்தியை சொல்ல விரும்பினால் அதைபற்றி சொல்லுங்கள். தேர்வுக்குழு மற்றும் அவர்களின் தகுதி பற்றி பேச விரும்பினால், உங்களுடைய தனிப்பட்ட கருத்தை நீங்கள் கூறலாம். ஆனால், என்னுடைய பெயரை உள்ளே இழுத்து விடக்கூடாது. இதுபோன்ற விஷயத்தில் என்னுடைய பெயரை பயன்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.
நான் விராட் கோலியின் காதலியாக இருக்கும்போதும், தற்போது மனைவியாக இருக்கும்போதும் நான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறேன். அப்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தேன். இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் நான் இருந்ததை பற்றி விமர்சனம் செய்தார்கள்.
தூதர அதிகாரியின் மனைவி கேட்டுக்கொண்டதனால் தான் நான் அதில் கலந்து கொண்டேன். அது மிகப்பெரிய விமர்சனமாக எழுந்தது. என்னை விருந்துக்கு முறைப்படி அழைத்திருந்தார்கள். என்றாலும், நானாகவே கலந்து கொண்டதாக கூறினார்கள். அப்போதும் அமைதியாக இருந்தேன்.
தற்போது இதுபோன்ற செய்திகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் என்னுடைய அமைதியை முறித்திக் கொண்டு பதில் அளிக்க முடிவு செய்தேன். என் அமைதியை பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
உண்மையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு மனிதரோ, கிரிக்கெட் போர்டோ, அல்லது எனது கணவரோ எனது பெயரை தேவையில்லாமல் இழுத்து பேசக்கூடாது. என்னை விட்டுவிடுங்கள். நான் என்னுடைய சொந்த கேரியர் மூலம் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது கருத்துக்கு தற்போது பரூக் இன்ஜினியர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் எதுவும் சொல்லவில்லை அவர் சிறந்த பெண்மணி நான் நகைச்சுவைக்காக சொன்ன விஷயம் பெரிதாக ஊதப்பட்டுள்ளது.
தேர்வாளர்கள் மீதுதானே தவிர அனுஷ்கா மீது எந்த கோபமும் கிடையாது. இந்த விடயத்தில் அனுஷ்கா மீது எந்த ஒரு தவறும் கிடையாது. நான் கூறிய கருத்தால் அனுஷ்கா புண்பட்டு இருந்தால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.