வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளுக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டக்காரர் ஒருவர் இவரை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது. இந்த விவகாரத்தை தற்போது ஷகிப் அல் ஹசன் ஐ.சி.சி.யிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவுக்கு வரும் நிலையில் ஷகிப் அல்ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விளையாட இருக்கும் வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக முஷ்ஃபிகுர் ரஹீமும், டி-20 கேப்டனாக மஹமதுல்லா அல்லது மொசடெக் ஹுசைன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தடை குறித்து ஷகிப் அல் ஹசன் கூறுகையில், “நான் விரும்பும் இந்த ஆட்டத்திலிருந்து தடைசெய்யப்பட்டதை எண்ணி வருந்துகிறேன். சூதாட்டக்காரர்கள் என்னை அணுகியதை ஐசிசியிடம் தெரிவிக்காததை நான் ஏற்றுக் கொண்டு இந்தத் தடையை முழுமையாக ஏற்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.