பிசிசிஐ நிா்வாகிகளுக்கான தோ்தல் வரும் 23ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்திய தலைமை தோ்தல் ஆணையா் (ஓய்வு) கோபால்சாமி இந்த தோ்தலை நடத்துகிறாா். பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடுகிறார்.
இதற்காக சவுரவ் கங்குலி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வேறு யாரும் போட்டியிடாததால், பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அதிகார பூர்வமாக 23ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, "பி.சி.சி.ஐ உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருக்கிறது. நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக உள்ளது, எனவே இது ஒரு சவாலாக இருக்கும்.
நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இது. கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.
நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து பேசுவேன். முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். அதுகுறித்து கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை'' எனத் தெரிவித்தார்.