இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்கள் இழந்து 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோஹித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டீன் எல்கர் 160 ரன்களும், டீகாக் 111 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 127 ரன்களும், புஜாரா 81 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்ரிக்க அணிக்கு 395 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி , இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.
பவுமா, டூபிளெஸ்ஸிஸ், டீகாக் ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் மார்க்ரம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரை ஜடேஜா வெளியேற்றினார். மேலும், அதே ஓவரில் வெர்னோன் ஃபிலான்டர், கேசவ் மஹராஜ் அடுத்ததடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த முத்துசாமியும், டேன் பீட்டும் நிதானமாக ஆடினர். அரைசதம் கடந்த பீட் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில், ஷமி 5 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி புனேவில் துவங்குகிறது.