இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது இவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து நடந்த ஐ.பி.எல் தொடர் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். இருப்பினும் அவ்வப்போது முதுகு வலியால் அவதிப்பட்டார்.
தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். முதுகு வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க ஹர்திக் பாண்டியா லண்டன் சென்றார்.
அங்கு, பாண்டியாவின் காயத்திற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா இன்று லண்டனில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
இதுகுறித்து ஹர்திக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இருப்பினும், இந்த காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து திரும்ப ஐந்து மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு முன்னர் ஹர்டிக் பாண்டியா மீண்டும் வரவில்லை என்றால், அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.