நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 போட்டியில், இலங்கை வீரர் லசித் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சாதனை படைத்தார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான T20 தொடரின் மூன்றாவது போட்டி இலங்கை பல்லகலேவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
பின்னர் 126 ரன்கள் எனும் இலக்கை நோக்கி ஆடியது நியூசிலாந்து அணி. பந்துவீசிய இலங்கை அணிக்கு, 3வது ஓவரை வீச வந்த லசித் மலிங்கா, மூன்றாவது பந்தில் முன்ரோவை போல்டாக்கினார்.
தொடர்ந்து, நான்காவது பந்தில் ரூதர்போர்டை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த மலிங்கா, ஐந்தாவது பந்தில் டி கிராண்ஹோம்பை போல்டாக்கி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து கடைசிப் பந்தில், ராஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கினார். இதன் மூலம் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் மலிங்கா.
தொடர்ந்து 5வது ஓவரை வீச வந்த மலிங்கா, நான்காவது பந்தில் ஷெய்பர்ட் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி 88 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் சர்வதேச அரங்கில் T20 போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மலிங்கா.
மலிங்கா இதற்கு முன்னதாக 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் T20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.