உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது தோனியின் மெதுவான ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்தன. தோனி ஓய்வுபெற வேண்டும் என பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி தோனி தன்னை ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.இந்த தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள T20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா 22 T20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. இதனால் உலககோப்பைக்கு தயாராகும் வகையிலே வீரர்கள் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர்.
அவ்வகையில், T20 உலககோப்பை மற்றும் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதற்கு ஏதுவாக மூன்று கீப்பர்களைத் தயாராக வைத்திருக்க அணி தரப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அடுத்தாண்டு நடைபெற உள்ள T20 உலககோப்பையில் இடம்பெறுவதற்கு ரிஷப் பண்ட்டுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவரை அடுத்து இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்படும். ஓய்வு என்பது வீரரின் தனிப்பட்ட முடிவு. அதில் தேர்வுக்குழு தலையிட உரிமையில்லை'' என கூறியுள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோனிக்கு அணியில் இடம் பெறுவது கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், தோனியின் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.