சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற 25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒகுஹாராவை 21க்கு 7, 21க்கு 7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடினார் சிந்து. இதன்மூலம், 42 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையையும் சிந்து படைத்தார்.
வரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை பி.வி.சிந்துவை குடியரசுத்தலைவர், பிரதமர் என உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு பிரபலங்கள் பாராட்டு மழையில் நனைத்தனர்.
இந்த நிலையில் பி.வி.சிந்து தங்கம் வெல்வதற்கு இதுதான் காரணம் என குறிப்பிட்டு பிரபல மகேந்திர குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உலக பேட்மிண்டன் தொடருக்காக ஹைதராபாத்-ல் உள்ள சுசித்ரா பேட்மிண்டன் அகாடமியில் சிந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்ட வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெறித்தனமான பயிற்சியின் மூலம் சிந்து உலகச்சாம்பியன் ஆகியிருப்பதாக ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டுள்ளார். வீடியோவை பதிவிட்டு, சிந்து எப்படி உலக சாம்பியன் ஆனார் என்பதில் இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. வளர்ந்து வரும் இளம் இந்திய வீரர்கள் சிந்துவின் கடினமான உழைப்பை பின்பற்ற வேண்டும்.
தங்கம் வெல்வதற்குத் தேவையான அனைத்து கடின முயற்சிகளையும் சிறிதும் தயக்கமின்றி மேற்கொண்டு மகுடத்தை சூடியுள்ளார் சிந்து என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திரா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.