இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. தற்போது 71வது ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவானது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்று இருந்த போது, ஜாக் லீச் அளித்த எளிதான ரன்-அவுட்டை நாதன் லயன் தவறவிட்டார்.மேலும், அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றபோது பந்து பேட்டில் படாமல் பேடை தாக்கியது. உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டு முறையிட்டனர்.
ஆனால் நடுவர் விரலை உயர்த்தவில்லை. ஆஸ்திரேலியாவிடம் டி.ஆர்.எஸ் வாய்ப்பு இல்லாததால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியவில்லை. டி.வி. ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை துல்லியமாகத் தாக்குவது தெரிந்தது. நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.
இதனையடுத்து அம்பயர் ஜோயல் வில்சனை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்னோ நடுவர்களை குறை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கேப்டன், ''இந்த தொடர் முழுவதுமே நான் ரிவியூ சரியாக கேட்கவில்லை. ஆகவே நான் நடுவர்களை குறை சொல்ல முடியாது. நடுவர் தீர்ப்புகளில் கவனம் செலுத்த முடியாது. நடுவரை குறைகூறுவதில் பயனில்லை. அனைவரையும் போல அவரும் தவறு செய்வது இயல்பு. நாங்கள் வெற்றிபெற வாய்ப்புகள் இருந்தது உண்மை'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெற்றி பெற 5 ரன்கள் இருக்கும் போது கமின்ஸ் பந்து ஒன்று ஜாக் லீச்சின் பேடில் பட்டது. அது முழுதும் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து என தெரிந்தும் ரிவ்யூ செய்து ஆஸி. அநாவசியமாக ரிவியூவை இழந்தது. அந்த ரிவியூ இருந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்கும். டிம் பெய்னின் கேப்டன்சி மீது முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடும் விமர்சனம் வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தத் தொடரில் டிம் பெய்ன் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், ஆஸ்திரேலிய கேப்டன்களிலேயே படுமோசமான பேட்டிங் இவருடையதுதான். கேப்டனாக இருப்பதால்தான் டிம் பெய்ன் அணியில் உள்ளார் என ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.