சுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சந்தித்தார்.
இதில் துவக்கம் முதல் சிந்துவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. முதல் செட்டை 21-7 என்ற புள்ளிகணக்கில் கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் சிந்து 21-7 என்ற புள்ளிகணக்கில் கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர்கணக்கில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து. இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து, இந்தியாவிற்கு உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது முறையாக பதக்கம் வென்று சாதித்தார் சிந்து.
2012ல் சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் சாதிக்க தொடங்கிய சிந்து, 2013 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பங்கேற்றார். அந்த தொடரில் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை Ratchanok Inthanon உடன் மோதிய சிந்து, 10-21, 13-21 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார். எனினும், தான் பங்கேற்ற முதல் உலக பேட்மிண்டன் தொடரிலேயே வெண்கலப்பதக்கத்தை வென்றார் சிந்து.
2014 உலக பேட்மிண்டன் தொடரிலும் அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து. அந்த தொடரில் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் உடன் விளையாடினார். இதில், 17-21, 15-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்த சிந்து, தொடர்ந்து 2வது முறையாக வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
2015 தொடரில் காலிறுதியுடன் நடையைக்கட்டிய சிந்து, 2017 தொடரில் தோல்வியை சந்திக்காமல், முதல் முறையாக உலக பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் ஜப்பானின் நோஸோமி ஒகுஹாராவை எதிர்கொண்ட சிந்து, 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் நீண்ட நேரம் போராடி நூழிலையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளியை வசப்படுத்தினார்.
கடைசி செட்டில் கடைசி புள்ளியில் வெற்றிக்கு சிந்து ஒகுஹாராவின் ரேலியை எதிர்கொண்ட தருணம், இன்றும் பேசப்படுகிறது. 2018 தொடரிலும் தனது திறமையினால் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார் சிந்து. 2018 இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் உடன் தங்கப்பதக்கத்திற்கு மல்லுக்கட்டினார்.
ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருவரும் மகுடத்திற்கு மோதிய அனுபவம் இருந்த போதிலும், இறுதிப்போட்டியில் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து வீழ்ந்து மீண்டும் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து 3வது முறையாக தற்போது இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த சிந்து தற்போது தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் சிந்து.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியை கொண்டாடினர்.