இந்திய கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக அவரது சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் ஒரு பகுதியில் அவ்வீரரின் பெயரை இடம்பெற செய்வர். இதுபோல பல முன்னணி வீரர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கௌரவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஸ்டாண்டிற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரை சூடடியுள்ளதாக டெல்லி கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
விராட் கோலி 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட்,ஒருநாள் T20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார். கோலி இதுவரை 20,508 சர்வதேச ரன்கள் குவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்குள் 20,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஏற்கனவே பிக்ஷன் சிங் பேடி, மொகிந்தர் அமர்நாத் ஆகியோரது பெயர்களில் ஸ்டான்ட் உள்ளது. மேலும், சேவாக் மற்றும் அஞ்சிம் சோப்ரா ஆகியோரது பெயர்கள் பெரோஷா கோட்லா மைதானத்தில் உள்ள கேட்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக இவ்வாறு செய்வார்கள். ஆனால், தற்போது விளையாடி வரும் வீரரின் பெயர் இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரருமான தோனி பெயரில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் பெவிலியன் உள்ளது குறிப்பிடத்தக்கது.