விளையாட்டு

தலையை பதம் பார்த்த பந்து : இரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்மித் விலகல்!

ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

தலையை பதம் பார்த்த பந்து : இரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்மித் விலகல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. தற்போது 71வது ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்திற்குப் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ஸ்மித், இங்கிலாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார்.

இங்கிலாந்து பவுலர்கள் குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் ஸ்மித்திற்கு குடைச்சல் கொடுத்து வந்தார். உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் முழங்கையைத் தாக்கியது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர், ஸ்மித் மீண்டும் ஆடத் தொடங்கினார்.

இதனையடுத்து, 77வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அப்போது முதலில் அவர் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஸ்மித். அடுத்த பந்து வேகமாக எழும்ப அதிலிருந்து ஸ்மித் தப்ப முயன்றார். இருப்பினும், பந்து ஸ்மித்தின் முகத்தில் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த ஸ்மித் கீழே சரிந்து விழுந்தார். மருத்துவர்கள் வந்து முதலுதவி அளித்தனர்.

தலையை பதம் பார்த்த பந்து : இரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்மித் விலகல்!

காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில், 80 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார் ஸ்மித். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர், 203/6 விக்கெட்டுகள் என்று இருந்தது. காயம் காரணமாக ஸ்மித் களமிறக்கப்படமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் களம் இறங்கினார் ஸ்மித்.

கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 161 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 92 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். ஸ்மித் சதமடித்து இருந்தால், இது அவரது ஹாட்ரிக் சதமாகும். ஆஸ்திரேலியா அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித்தின் மன உறுதியை ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பின்னர் மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில், 90 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. ஐந்தாம் மற்றும் கடைசி நாளான இன்றைய ஆட்டம் மழை காரணமாக மிகவும் தாமதமாகத் தொடங்கியது.

முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் முகத்தில் அடிவாங்கி நிலைகுலைந்த போது மற்ற வீரர்கள் அனைவரும் ஸ்மித் அருகே கவலையுடன் கூடியிருக்க, ஆர்ச்சர் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகுவதாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஸ்மித், இரவு முழுதும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பது குறித்து, எதிர்வரும் நாட்களில் அவர் குணமடையும் விதத்தை பொறுத்தே உள்ளது.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories