உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் டி20 தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, மரண ஃபார்மில் இருந்தார். 9 இன்னிங்சில் விளையாடிய ரோகித், 81.00 சராசரியில் 648 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் டி20 தொடரில் இந்திய பேட்டிங் ஜாம்பவான் ரோகித் சர்மா பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக அரை சதம் :
இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைசதமும் 1 சதமும் அடங்கும். இத்தொடரில் ரோகித் சர்மா 2 அல்லது அதற்கும் மேற்பட்ட அரைசதங்களை விளாசினால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற புதிய மைல்கல்லை அடைவார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடிய இலங்கை வீரர் தில்சன் 4 அரைசதங்களை விளாசி இச்சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர் விளாசிய பேட்ஸ்மேன்:
சர்வதேச டி20யில் 100க்கும் அதிகமான சிக்ஸர்களை விளாசிய ஒரே இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ரோகித் சர்மா, 3 சிக்ஸர்கள் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிப்பார்.
சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகள் விளாசிய பேட்ஸ்மேன்:
சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகளை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை இலங்கை வீரர் தில்சன் வைத்துள்ளார். அவர் சர்வதேச டி20யில் 223 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். விராட் கோலி இன்னும் ஒரு பவுண்டரி விளாசினால் அச்சாதனையை முறியடிப்பார்.
அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சேஷாத்தும் (218 பவுண்டரிகள்) இந்திய வீரர் ரோகித் சர்மாவும் (207 பவுண்டரிகள்) உள்ளனர். ரோகித் இருக்கும் தற்போதைய ஃபார்மை வைத்து பார்த்தால் இச்சாதனையை ரோகித் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
நாளை நடைபெறும் முதல் டி-20 ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவின் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தின் நேரடி ஒளிபரப்பை சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் எச்டி ஆகிய சேனல்களில் பார்க்கலாம். மேலும், போட்டிகளை சோனி LIV செயலியிலும் நேரடியாக காணலாம்.