கடந்த 2017ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த ஸ்டார் நிறுவனத்தின் ஜெர்சி விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்தது. இதையடுத்து, சுமார் ரூ.1079 கோடிக்கு அந்த ஒப்பந்தத்தை பெற்றது oppo நிறுவனம். அதிலிருந்து இந்தியா அணியின் ஸ்பான்சராக ஓப்போ நிறுவனம் இருந்து வருகிறது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் சீருடைகளில் oppo நிறுவனத்தின் லோகோ இடம்பெறாது எனவும், அதற்கு பதிலாக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி சேவைகளை அளிக்கும் நிறுவனமான BYJU’s நிறுவனத்தின் பெயர் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ இந்தியா கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி சேவைகளை அளிக்கும் நிறுவனமான BYJU’s நிறுவனம் செயல்படும்.
இந்த ஒப்பந்தம் 2019 செப்டம்பர் மாதம் தொடங்கி 2022 மார்ச் வரை தொடரும். வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் ஜெர்சிகளில் BYJU’s நிறுவனத்தின் லோகோ இடம்பெறும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடுகிறது என்றால், பி.சி.சி.ஐ அமைப்புக்கு Oppo நிறுவனம் 4.61 கோடி ரூபாயும்,அதே போல இந்திய அணி, ஐ.சி.சி நடத்தும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது என்றால், ஐ.சி.சி அமைப்புக்கு ஒரு போட்டிக்கு 1.56 கோடி ரூபாய் Oppo நிறுவனம் செலுத்தி வந்துள்ளது. இதனால் கடன்சுமை அதிகரித்துள்ளதால் தான் ஸ்பான்சர்ஷிப் தருவதில் இருந்து தன் ஒப்பந்தத்தை BYJU’s நிறுவனத்திற்கு மாற்றி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
BYJU’s நிறுவனம் கேரளாவை சேர்ந்த பைஜூ ரவீந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது. பைஜூ ரவீந்திரன், தனது நண்பர்கள் கேட்டுக்கொண்டதால், அவர்களுக்கு கேட் தேர்வு பயிற்சியளித்துள்ளார். அவர் பயிற்சியளித்த அத்தனை பேரும் அந்த ஆண்டே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து 2007ம் ஆண்டு பெங்களூரில் BYJU’s என்கிற பெயரில் கோச்சிங் சென்டரை துவங்கினார்.
பின்னர் அதை 2011ம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகளாக மாற்றினார். கடந்த ஆண்டு BYJU’s மொபைல் ஆப் ரிலீஸ் செய்யப்பட்டது. பெங்களூரில் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 520 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. BYJU’s நிறுவனம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய உள்ளது பலராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் விஷயமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.