2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி சார்பில் கப்தில், ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்ய கடைசி பந்தில் கப்தில் ரன் அவுட்டானார்.
இறுதியில் சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில், சூப்பர் ஓவரில் 2வது பந்தை ஜிம்மி நீஷம் சிக்சருக்கு தூக்கினார். சூப்பர் ஓவரில் ஜிம்மி நீஷம் அந்த சிக்ஸரை அடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜிம்மி நீஷமின் சிறுவயது பயிற்சியாளர் டேவ் கார்டன் உயிர் பிரிந்ததாக அவரது மகள் லியோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய கார்டனின் மகள் லியோனி, “ சூப்பர் ஓவரில் நீஷம் அடித்த சிக்ஸ் தான் எனது தந்தையின் கடைசி தருணமாகும். நீஷமின் அந்த சிக்ஸரை பார்த்த பிறகு, அவர் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார்” இவ்வாறுத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜிம்மி நீஷம் தன் ட்விட்டரில், “டேவ் கார்டன், எனது உயர் கல்வி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். உங்கள் தலைமையில் விளையாடியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அப்படிப்பட்ட ஒரு போட்டிக்கு பிறகு, நீங்கள் உயிரிழந்து இருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமைப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அனைத்துக்கும் நன்றி, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.