உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரை இந்தியாதான் நிச்சயம் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதனால் ரசிகர்கள் ஒருபக்கம் சோகமாக இருந்தாலும் மறுபக்கம் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தோல்வியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் அணியின் கேப்டன் கோலியையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் மையப்படுத்தி உள்ளது.
இதுவரை ரசிகர்கள் மட்டுமே விமர்சித்து வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இவர்கள் இருவரையும் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் , “ உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் பேட்டிங்கில் 4ம் இடத்திற்கு யாரை விளையாட வைப்பது என்கிற திட்டமே இல்லை. எந்த வீரரையும் நான்காம் இடத்திற்கு தயார் செய்யவில்லை. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் எந்த வீரரும் நான்காம் வரிசையில் சரியாக ஆடவில்லை.
முன்பே உலகக்கோப்பை போட்டியை மனதில் வைத்துக் கொண்டு சில வீரர்களை அந்த இடத்திற்கு தயார் செய்திருக்கவேண்டும். அதில் அவர் சோபிக்கத் தவறி இருந்தால், அவரிடம் நீங்கள் தான் உலகக்கோப்பையிலும் நான்காவது இடத்தில் விளையாடப் போகிறீர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுங்கள் என எச்சரித்து ஒருவரைத் தயார் படுத்திருக்கவேண்டும்.
அம்பதி ராயுடு திடீரென ஓய்வு அறிவித்தை கேட்டதும் மிகுந்த வேதனையாக இருந்தது. முன்பு நடந்த போட்டிக்காக நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் ராயுடு இடம் பெற்றிருந்தார். நன்றாகத் தானே விளையாடினார். ஒவ்வொரு வீரரும் சில நேரங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அது இயல்புதான்.
அதுபோலத்தான் ராயுடு அந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. அதற்கு உலகக்கோப்பை அணியில் இருந்து ராயுடுவை நீக்கிவிட்டார்கள். ஒரு அணியில் நான்காம் இடம் என்பது எவ்வளவு மிக முக்கியமானது என்பது குறித்த அடிப்படை அறிவே இல்லாமல் இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டு இருக்கிறது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆட்டமிழந்து விட்டால், இந்திய அணியை எளிதாக தோற்கடித்துவிடலாம் என்று அனைத்து அணிகளும் எளிதாக அறிந்து வைத்திருந்தார்கள். இனி வரும் காலங்களில் நான்காம் இடத்துக்கு வலுவான வீரர் ஒருவர் தேவை.
அதற்கு என்ன மாதிரியான திட்டத்தை வைத்திருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், மற்ற நாடுகளின் பேட்டிங்க் வரிசையைப் பாருங்கள். எப்படி வலுவானதாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.