உலகக் கோப்பை 2019 தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்கிறது. கடந்த புதன் கிழமை, நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல், மற்றுமொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இதன்மூலம் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று கணிப்பில் இந்திய ரசிகர்கள் பலர் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி இருந்தனர். ஆனால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை என்றதும் பலர் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தனர்.
ஒரு சிலர் மட்டும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல், டிக்கெட் விலையை விட கூடுதல் விலை வைத்து வெளியில் சிலர் டிக்கெட் விற்க தொடங்கினார்கள். இது ஐ.சி.சி அமைப்பிற்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜிம்மி நீசம் செய்துள்ள ட்வீட் ஒன்றில், “ அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, உங்களுக்கு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வர விருப்பமில்லை என்றால் தயவு செய்து அந்த டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ ஐ.சி.சி தளம் மூலமே விற்றுவிடுங்கள். இதை வைத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால் வசதி இல்லாத கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் பார்க்க வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனவே, அதிகாரப்பூர்வ தளத்தில் டிக்கெட்டை விற்றுவிடுங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இவரின் கருத்துக்கு சில இந்திய ரசிகர்கள் ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் பல இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.