உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதியில் விளையாடி வருகின்றன. பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். இந்த தொடரின் வெற்றி ஜோடியாக களம் கண்டு வந்த இவர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் பின்ச், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் பந்துவீச்சில் டக்-அவுட்டாகினார்.
அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்கவீரரான வார்னர் வோக்ஸ் பந்துவீச்சில் பேரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஹேண்டஸ்காம்ப் வோக்ஸ் பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 14 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. அவரை அடுத்து விக்கெட் கீப்பர் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வந்தார்.
போட்டியின் 8வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை கேரி எதிர்கொண்டார். பவுன்சரை கண்டதும், பேட்டை கீழே இறக்கி, கீழே சாய்ந்து தப்பிக்க நினைத்தார் கேரி.
எனினும், பந்து அவரின் தாடைப் பகுதியில் பலமாக தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் ஹெல்மட் கழன்று விழுந்தது. அதை கேட்ச் பிடித்து ஹிட் விக்கெட் ஆகாமல் தப்பித்தார் கேரி. ஆனால் அவரது தாடைபகுதியில் இருந்து ரத்தம் சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்டபட்டது.
அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற சந்தேகம் நிலவிய போது காயத்திற்கு முதல் உதவி செய்து கொண்டு தாடை முழுவதும் பிளாஸ்திரி உடன் கேரி ஆடினார். 70 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர பெரும் உதவி செய்தார். இறுதியாக, ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது.
224 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து வெற்றியை நோக்கி வீறுநடைப் போட்டு வருகிறது.
இதே போல அனில் கும்ப்ளே ஒருமுறை தாடைப் பகுதியில் காயமடைந்து கட்டுப் போட்டுக் கொண்டே விளையாடியது நினைவிருக்கலாம். அதே போலவே அலெக்ஸ் கேரி அணிக்காக போராடினார். அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.