12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் மோதிய இத்தொடரில் இந்தியா 15, ஆஸ்திரேலியா 14, இங்கிலாந்து 12, நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று மான்செஸ்டர் நகரில் நடக்க உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் முதலிடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
மான்செஸ்டர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் எனவும் 'டாஸ்' வென்று பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. எனவே டாஸ் ஃபேக்டர் இப்போட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
அதுபோக, வெற்றியைத் தீர்மானிப்பதில் மழையும் முக்கியப் பங்கு வகிக்கும். மான்செஸ்டரில் மழை பெய்ய 30% வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதித்தால் வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் போட்டியை நடத்துவது உள்பட பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை 'டை' ஆன பின் மழையால் இரண்டு நாட்களும் அரையிறுதி ஆட்டம் ரத்தானால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும்.
லீக் சுற்றில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் இதுதான் இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதும் முதல் ஆட்டம். இந்தாண்டு துவக்கத்தில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே 4-1 என வென்ற நம்பிக்கையுடன் இந்தியா களம் இறங்குகிறது.
இதே மான்செஸ்டரில் கடந்த 1983-ல் நடந்த அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்தை (60 ஓவர்கள் 213/10) இந்தியா (54.4 ஓவர்கள் 217/4) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. அதேபோல இன்றும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.