இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இந்திய அணி குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இந்திய அணியின் தலைசிறந்த வீரர் தோனி இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் விளையாடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை 2019ம் ஆண்டு தொடரின் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்து உள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அவர், இந்திய அணியின் சிறந்த வீரர் தோனி இன்னும் ஒருவருடம் விளையாடவேண்டும் என தனது விருப்பத்தை வலியுறுத்தினார். மேலும் தோனி சிறந்த ஃபினிஷர் என்றும் இனிவரும் காலத்திலும் அவரை யாராலும் வீழ்த்தமுடியாது, அவருடைய அனுபவத்தையும், அவர் கடந்த சூழ்நிலைகளையும், இளம் வீரர்களுக்கு அவர் கற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது இந்திய அணி சிறப்பாக சிறப்பாக விளையாடுவதற்குக் காரணம் முன்னாள் கேப்டன் தோனி மூலமாக நல்ல அனுபவத்தை பெற்றுள்ளதுதான். அதனால் தான் இந்திய அணி வெற்றிகரமான அணியாக இந்த உலக கோப்பையில் வலம் வருகிறது என நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது இந்திய அணியில், நல்ல வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின்போதே தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தினார்கள். அதனால் அணியை வெற்றிபெறச் செய்ய என்ன செய்யவேண்டும் என அனைவருக்குமே தெரிந்துள்ளது என்று புகழ்ந்தார்.
மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி இருவரும் துல்லியமான பந்துவீச்சாளர்கள். ஷமி 5 விக்கெட் அல்லது 3 விக்கெட் என எடுக்கக் கூடியவர். அவர் பந்தை சுழற்றும்போது துல்லியம் இருக்கும். அதேபோன்று பும்ரா இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். மேலும் அழுத்தமான சூழலை பொறுமையுடன் கையாள்கிறார். அவர்களிடம் நல்ல கூட்டணி உள்ளது என்றே நான் பார்க்கிறேன்.
இதனால் தான் இந்திய அணி வெற்றிகரமான அணியாக உள்ளது. நடைபெறும் உலகக்கோப்பை தொடரில், பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்துவார் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன். மேலும் அவர் 5 விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா நிச்சயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மலிங்கா இந்திய அணியை புகழாரம் சூட்டியது, இந்திய அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகம் அளித்துள்ளது.