இந்தியா, வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டானில் நேற்று நடைபெற்றது. இது வங்கதேச அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்ற நேற்றைய லீக் போட்டியின்போது இந்திய அணியின் வெற்றியோடு, ஒரு 87 வயது மூதாட்டியும் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான 87 வயது மூதாட்டியின் பெயர் சாருலதா படேல். எட்ஜ்பஸ்டான் மைதானத்தின் முன் வரிசையில் வீல் சேரில் அமர்ந்திருந்த சாருலதா பாட்டி இந்திய அணி பேட்டிங்கில் ஈடுபட்ட போது, இளம் ரசிகர்களுக்கு இணையாக துளியளவும் எனர்ஜி குறையாமல் இந்திய வீரர்கள் ரன் விளாசியபோதும், விக்கெட்டுகளை எடுத்தபோதும் தன்னிடம் இருந்த ட்ரம்பெட்டை ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சாருலதா.
இதற்கிடையில், முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது, முன் வரிசையில் இருந்த சாருலதா பாட்டியை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அதேப்போல் ஹிட்மேன் ரோஹித் சர்மாவும் சாருலதா பாட்டியிடம் ஆசிபெற்றார்.
இதுகுறித்து, “போட்டிக்கு ஆதரவளித்து இந்திய அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி. முக்கியமாக, சாருலதா படேல் ஜி-க்கு எனது நன்றி. அவரைப் போன்ற ஆர்வமுள்ள அர்ப்பணிப்புள்ள ரசிகரை கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் மட்டுமே.
ஆர்வம்தான் எந்த எல்லைக்கும் கொண்டுச் செல்லும். அவருடைய ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேறியுள்ளோம்” என ட்விட்டரில் விராட் கோலி பதிவிட்டிருந்தார்.
சாருலதா பாட்டியின் புகைப்படமும், கோலியின் ட்வீட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகின. இதற்கிடையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சாருலதா பாட்டி, 1983-ம் ஆண்டு இந்திய அணிக்காக கபில்தேவ் உலகக்கோப்பை வென்றபோதும் நான் அங்கே இருந்தேன்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாடும் போதெல்லாம் நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன். இந்த முறையும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி வீரர்களை நான் ஆசிர்வதிப்பேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.