இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் 38-வது லீக் போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் 337 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே சறுக்கலை சந்தித்து பின்னர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சால், 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களே இந்திய அணி எடுத்தது.
இதனையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 1992க்கு பிறகு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பெருமையையும் இங்கிலாந்து பெற்றது.
இந்நிலையில், ஆட்டநாயகனாக தேர்வான இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ கூறுகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், பி.சி.சி.ஐ. ஆலோசனைக் குழு உறுப்பினருமான வி.வி.எஸ்.லக்ஷ்மண் பெரிதும் உதவி செய்தார் என குறிப்பிட்டார்.
ஐ.பி.எல். போட்டியின் போது சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது ஸ்பின் பவுலிங்கை கையாளுவது குறித்து வி.வி.எஸ்.லக்ஷ்மண் கூறிய அறிவுரைதான் தற்போது உலகக்கோப்பை ஆட்டத்துக்கும் உதவியாக இருந்தது என பேர்ஸ்டோ தெரிவித்தார்.