உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோலி மற்றும் தோனி இருவரும் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பொறுமையான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் விமர்சித்திருந்தார். நேற்றைய போட்டியிலும் பொறுமையாக விளையாடிய தோனி கடைசி ஓவரில் சற்று அதிரடியைக் காட்டினார். இந்நிலையில், தோனியின் பொறுமையான பேட்டிங் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் தோனி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோலி, ''அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்கு தெரியும். அதன்படிதான் நடுவரிசையில் ஆடி வருகிறார். சில நேரங்களில் ஆடாமல் இருக்கலாம். இது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அனைவரும் அது குறித்தே விமர்சனம் செய்கிறார்கள். அவர் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். தோனி கடைசிக் கட்டத்தில் 15 - 20 ரன்கள் கூடுதலாக தேவை என்கிறபோது, அந்த 15 -20 ரன்களை எப்படி எடுப்பது என அவருக்கு நன்றாகவே தெரியும்.
தோனியின் அனுபவம் 10 -ல் 8 முறை அணிக்குக் கைகொடுக்கிறது. போட்டி தொடர்பான சரியான புரிதல் அவருக்கு இருக்கிறது. அந்த புரிதல் கொண்டு அவர் எங்களுக்கு உதவிக்கொண்டே இருப்பார். இந்த மைதானத்தில் 260 நல்ல ஸ்கோர் என்றார். அதுதான் நடந்தது. அவர் ஒரு லெஜெண்ட் என்பது அனைவருக்கும் தெரியும் '' இவ்வாறு கோலி கூறினார்.