நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக விளங்கி வருகிறது இந்திய அணி. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் அணிகள் மோதின. இந்திய அணி நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ட்விட்டரில், ``பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேட்டுள்ளார்.
இதற்கு, இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், “நாசர், உங்கள் ஆதரவு யாருக்கு?” எனக் கேட்க அதற்குப் பதிலளித்த நாசர் ஹுசைன், “இங்கிலாந்து அணிக்குதான் என் ஆதரவு. இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ரக்பி ஆட்டத்தில் நீங்கள் யாரை ஆதரித்தீர்களோ.. அப்படித்தான் நானும்” என்றார்.
இந்தக் கேள்வி - பதில் மோதலுக்குக் காரணம், நாசர் ஹுசைன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். பீட்டர்சன் தென் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இது ஒருபுறமிருக்க, நாசர் ஹுசைனின் கேள்விக்கு பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள் அண்டை நாடான இந்தியாவை ஆதரிப்போம் என பதிலளித்துள்ளனர். அதில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
‘எங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக, அண்டை நாடான இந்தியாவுக்கு ஆதரவு தருவோம்’ எனத் தெரிவித்துள்ளார் அந்த ரசிகை. இந்தப் பதிலை இந்திய ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.