உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. இந்திய அணி வீரர் ஷிகர் தவன் அந்த போட்டியில் சதமடித்து அசத்தினார்.
இந்திய அணி பேட்டிங் செய்த போது நாதன் குல்டர் நைல் வீசிய பந்தில் தவானின் இடது கை பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தோடு பேட் செய்து ஷிகர் தவான் சதம் அடித்தார். இந்திய அணி பீல்டிங் செய்தபோது தவானுக்கு பதில் ஜடேஜா தான் பீல்டிங் செய்தார்.
இதன் பின் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் தவான் மூன்று வாரங்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவான், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது.
இந்நிலையில் அவரது காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பி.சி.சி.ஐ நிர்வாகி, ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் " எனக் கூறினார்.