உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்ட்ன சர்பராஸ் அஹமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். உலகக் கோப்பை தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். மற்றொரு முனையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் லோகுஷ் ராகுல் 69 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 136 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து, ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். அதேவேளையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரன் உயர்வில் சற்று தொய்வு ஏற்பட்டது.இதனால் இந்தியா 34.2 ஓவரில்தால் 200 ரன்னைத் தொட்டது. ரோகித் சர்மா 85 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் அவரது 2-வது சதம் இதுவாகும். ரோகித் சர்மா 113 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் 38.2 ஓவரில் 234 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 26 ரன்னுக்கும், டோனி 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.
இதன்பின் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜமான், இமாம் களமிறங்கினார். இமாம் 7 ரன்கள் எடுத்திருந்த போது விஜய் சங்கர் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து, பஃகர் ஜமானுடன் பாபர் அசாம் டி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இதில் பஃகர் ஜமான் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தினை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.
இதில் பாபர் அஸாம் 48 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பஃகர் ஜமானும் 68 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஹபீஸ், சப்ராஸ் அகமது மற்றும் சோயிப் மாலிக் என முண்ணனி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழையினால், ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டுமென டக்வர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத வரலாற்று சாதனையை இந்தியா தன்வசமே தக்கவைத்து கொண்டது.