கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா - ஷிகர் தவான் நிதானமாக விளையாடி ரன் குவித்து வந்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பாவை பந்து வீச அழைத்தார்.
ஆனால் அவர் பந்துவீச தொடங்குவதற்கு முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு துலாவிக்கொண்டே இருந்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடம் சாம்பா அடிக்கடி கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததால் அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், "அந்தப் புகைப்படங்களை நான் பார்க்கவில்லை. ஆனால், அவர் பாக்கெட்டில் எப்போது ஈரப்பதம் குறைக்கும் பொருட்களை வைத்திருப்பார். அவர் விளையாடும் எல்லா போட்டி நேரத்தில் அவரிடம் அது இருக்கும். நான் இன்னும் அந்த புகைப்படங்களை பார்க்கவில்லை. அதனால், அது குறித்து அதிகம் பேச முடியாது. ஆனால், அவர் எப்போதும் வாமர்ஸ் (hand warmers) வைத்திருப்பது எனக்கு தெரியும்" எனக் கூறினார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.