விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : வங்கதேச அணி அபார வெற்றி !

உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை 2019 : வங்கதேச அணி அபார வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடரில் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 2)நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும், வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால், செளமியா சர்கார் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினர். ஷகிப் அல் ஹசன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி புதிய சாதனை படைத்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி சார்பாக அதிக ரன் பார்ட்னர்ஷிப் போட்டி வீரர்கள் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் 75 (84) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் 78 (80) பெற்றுள்ளனர். இந்த ஜோடி 142 ரன்களை குவித்து அசத்தினர்.

முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில் அவுட்டானார் அடுத்து களமிறங்கிய மொகமது மிதுன் 21, மொசாடெக் ஹூசைன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 46 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. டீ காக் மற்றும் மார்க்ரம் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமாக துவக்கம் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீ காக் 23 ரன்களில் ரன் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து மார்க்ரம் 45 ரன்களில் இருந்த போது சகீப் பந்தில் விக்கெட்டினை இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் டூ பிளசிஸ் மில்லர் உடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் அரை சதத்தை கடந்த நிலையில் மெஹதி ஹாசன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மில்லரும் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் போட்டி வங்கதேச அணியின் பக்கம் திரும்பியது. அதன் பின்னர் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. டேவிட் மில்லர் 38 ரன்னிலும், வான்டெர் துஸ்சென் 41 ரன்னிலும், பெலுக்வாயோ 8 ரன்னிலும், கிறிஸ் மாரிஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென்னாப்ரிக்க அணி 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் மட்டுமே குவித்தது. எனவே போட்டியை வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரகுமான் 3 விக்கெட்டுகளையூம், சாய்பூதின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம் தென்னாப்ரிக்க அணி தொடர்ந்து 2 பேட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. தென்னாபிரிக்க அணி தனது அடுத்த போட்டியில் இந்திய அணியை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

banner

Related Stories

Related Stories