பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த நெய்மார் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக கடந்த மாதம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாவ்பாலோ காவல்துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, பல்வேறு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை பாரீஸில் உள்ள விடுதிக்கு வரவழைத்ததாகவும், அவரது விருப்பமின்றி அவரை நெய்மார் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணம் பறிக்கும் திட்டத்தோடு வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டு பொய்ப் புகார் அளித்துள்ளதாக நெய்மார் தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெய்மாரும் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நெய்மார் தற்போது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்காக விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நெய்மார் கேப்டன் பதவிலியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டேனி அல்வேஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.