விளையாட்டு

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : பங்களாதேஷை பந்தாடியது இந்தியா !

பங்களாதேஷ்க்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : பங்களாதேஷை பந்தாடியது இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்க உள்ளது. இதையடுத்து அனைத்து அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, பங்களாதேஷ் அணியுடன் கார்டிப்பில் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த பங்களாதேஷ் கேப்டன் மோர்தசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்தியாவின் துவக்க வீரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இன்னிங்சை தொடங்கினர். ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் விராட் கோலி தனது பங்குக்கு 47 ரன்கள் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். விஜய் சங்கர் 2 ரன்களுக்கு அவுட்டானார்.

102 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (22 ஓவர்) இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுலும், டோனியும் அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். அற்புதமாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (99 பந்து, 12 பந்து, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் டோனி சிக்சர் அடித்து மூன்று சதத்தை கடந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த டோனி 113 ரன்களில் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ஷகிப் அல்-ஹசனின் பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.

அடுத்து 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி ஜூன் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

banner

Related Stories

Related Stories