ஆசிய தடகளப் போட்டி கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
சமூக வலைதளங்களிலும் ‘தங்க மங்கை’ எனக் குறிப்பிட்டு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தாயகம் திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து மற்றும் ஆடவர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் எந்த வித வரவேற்பும் அளிக்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் எழுமின் மற்றும் தமிழர் தொழில் வணிக வேளான் பெருமன்றம் சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கோமதி பேசியதாவது,
“ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் எனக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. போதிய அளவு உதவி அரசு மூலம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் திறமையான வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி உயர்த்தவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் விடுதியில் உள்ள விளையாட்டு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான உணவு கூட கொடுக்கப்படாதது வருத்தைத் தருகிறது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.
12-ம் வகுப்பு வரை வெறும் காலோடுதான் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். இனிமேலாவது என்னைப் போல் உள்ள மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முறையான அடிப்படைத் தேவைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மற்றும் ஆரோக்கிய ராஜீவுக்கு இதுவரை மாநில அரசு சார்பில் எந்த ஒரு நிதியுதவியும் அறிவிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பதக்கம் வென்ற கோமதி மற்றும் ஆரோக்கிய ராஜீவுக்கு தி.மு.க சார்பில் முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி கோமதி மாரிமுத்துவுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி அறிவித்துள்ளது.