ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே 5 ஆட்டங்களில் விளையாடி தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் ரன்விகித அடிப்படையில் கொல்கத்தா அணி பட்டியலில் முதலிடத்திலும், சென்னை அணி 2-வது இடத்திலும் உள்ளன.
தோனி தலைமையிலான சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் கொல்கத்தா அணி நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.
இரு அணியிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் சுழலுக்குச் சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களுக்கும் கடும் சவால் காத்திருக்கக்கூடும். இதில் எந்த அணியின் சுழற்பந்து வீச்சு வெற்றியைத் தேடித்தரப்போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.
டாப் ஆர்டர் பேட்டிங்கில் நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக கிறிஸ் லின் (50), சுனில் நரைன் (47) ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ஸல் இந்த சீசனில் அதீத ஃபார்மில் உள்ளார். 4 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள அவர் 51.75 சராசரியுடன் 207 ரன்களைக் குவித்துள்ளார். 22 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையும் விளாசியுள்ள ரஸ்ஸலின் ஸ்டிரைக் ரேட் 268.83 ஆக உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகியிருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி குர்னே சென்னை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. குல்தீப் யாதவ் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தனது பௌலிங்கை மேம்படுத்தி வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி : சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபி உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், சுப்மன் கில், ப்யூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி குர்னே, பிரஸித் கிருஷ்ணா.
சென்னை அணியில் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார். தொடர்ந்து சொதப்பிவரும் சுரேஷ் ரெய்னா இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நடுவரிசை பேட்டிங்கில் அம்பதி ராயுடுவும், தோனியும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தனர். இவர்களிடமிருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
தீபக் சகார் பவர்பிளேவில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி, இவர்களது ஆட்டத்திறனை கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் குகளின் கடைசி ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசினார்.
உத்தேச அணி : ஷேன் வாட்சன், ஃபேப் டுபிளஸ்ஸிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குகளின், தீபக் சகார், இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங்.