இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல், காவி திணிப்பும், இந்தி திணிப்பும் தடையுறாமல் அரங்கேறி வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் வழி பள்ளிகளில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, காவி அரசியல் சார்ந்த வழிமுறைகள் திணிப்பு அரங்கேறி வருகின்றன.
அது போல, குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்றம், ஒன்றியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள், ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் காவி வண்ணம், ஒன்றிய பொத்துறைகளில் இந்தி என ஒன்றிய பா.ஜ.க அரசின் திணிப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் லோகோவுக்கு காவி சாயம் பூசியதோடு, தமிழில் உள்ள அதன் பெயரையும் மாற்றியது. தொடர்ந்து அண்மையில் ஒன்றிய பொது நிறுவனமான BSNL நிறுவனத்தின் சின்னத்திற்கு காவி பூசியது ஒன்றிய பா.ஜ.க அரசு. தற்போது ஒன்றிய அரசின் மற்றொரு பொது நிறுவனமான LIC-யிலும் இந்தி திணிப்பை முன்னெடுத்துள்ளது.
LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது. மொழி மாற்றும் பிரிவில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் இணையதளத்தை காண இயலுவதால், சராசரி மக்கள் இணையதளத்தை எளிதாக கையாள இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அந்த மொழி தேர்ந்தெடுப்பு கூட இந்தியில் உள்ளதால், இந்தி தெரியாத மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் எழுப்பி வரும் நிலையிலும், திணிப்பு நடவடிக்கைகளை முன்னெடித்து மக்களை வஞ்சிப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்த விவகாரத்துக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பத்தாண்டு காலத்தில் மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு கட்டாயப்படுத்தப் படுகிறது.
வானொலி ,தொலைக்காட்சிகளில் இந்தி மயம், இந்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர், குற்றவியல் சட்டங்களை மாற்றி இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்று பல வகைகளில் ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக புகுத்தி வருகிறது.
ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்றிய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல ஒன்றிய அரசின் சமூக ஊடகங்களில் முழுதாக இந்தி மொழிதான் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும்.
ஆனால் ஒன்றிய பாஜக அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் நிலை ஏற்படும்.
எனவே இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி இணையதளத்தை முன்பிருந்ததைப் போல ஆங்கில மொழியில் உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.