பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவராக விளங்கி வரும் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வரும் மாநிலம் தான் உத்தரப் பிரதேச மாநிலம்.
காவி உடையணிந்து யோகியாக, தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் கல்விக்கான முக்கியத்துவமும், உரிமை வழங்கலும் பெருமளவில் பின் தங்கிய நிலையிலேயே நீடித்து வருகிறது.
அதற்கு, அண்மையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 27 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை மூட அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதும், முன்னெச்சரிக்கை விடுக்காமல் சிறுபான்மையினர்களின் வீடுகளை இடித்து வருவதும் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.
குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பொதுத்துறைக்கு சொந்தமான 3.7 சதுர மீட்டர் நிலத்தில் வீடுகட்டியதாக, மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் மனோஜ் டிப்ரெவல் ஆகாஷ் என்பவரின் வீட்டை, எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இடித்து தரைமட்டமாக்கியது உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு.
இதனைக் கண்டித்து, 2020ஆம் ஆண்டு மனோஜ் அளித்த புகாரின் பேரில், விசாரணை செய்ய ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம். இச்சூழலில், கடந்த 4 ஆண்டுகளாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, இன்று (நவம்பர் 6) தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
தீர்ப்பில், “மாநில அரசிற்கு சொந்தமான 3.7 சதுர மீட்டர் நிலம் என்பது மீட்புக்குரிய பகுதி தான். ஆனால், முன் அறிவிப்பு ஏதும் இன்றி, வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது, சட்டத்திற்கு எதிரானது. இது போன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியது” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது.
மேலும், இதற்கு அபராதமாக ரூ.25 இலட்சம் இழப்பீடு தொகையை மனுதாரர் மனோஜிற்கு உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் விவரமும், விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம், உத்திரப் பிரதேச தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.