தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக திமுக அரசு கல்விக்கு, அதிலும் பள்ளி கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் கல்வித்துறைக்கு மட்டுமே அதிகளவு நிதி ஒதுக்கி வருகிறது. வெறும் கல்வியோடு மட்டுமின்றி, மாணவர்களின் கலைத்திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக, ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது.
மாணவ - மாணவியரின் மறைமுக திறமைகளை இது வெளிகொண்டு வருவதற்கான சரியான பாதையாக அமைந்துள்ளது. தொடர் முன்னெடுப்பின் பலன் தற்போது விதைபோட தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தனியார் தொலைகாட்சியின் ரியலிட்டி ஷோவில் பாடல் பாடி பெருமளவு மக்களை ஈர்த்துள்ளார்.
கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி படிப்பவர் யோக ஸ்ரீ. பால்வார்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், அரசு பள்ளியள்ளி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்; தாயார் பஞ்சு மில்லில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 2 தங்கை, ஒரு தம்பி இருக்கும் நிலையில், இவர் மூத்த பிள்ளையாவார்.
இந்த சூழலில் சிறு வயதில் இருந்தே இவருக்கு பாட்டு பாடும் திறமை இருந்ததை உணர்ந்த, அம்மாணவியின் 2-ம் வகுப்பு ஆசிரியை மகேஸ்வரி யோக ஸ்ரீ-க்கு சிறு வயதில் இருந்தே பயிற்சி வழங்க பெரும் துணையாக இருந்துள்ளார். இந்த சூழலில் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் மாணவி பங்கேற்றுள்ளார்.
பல்வேறு கட்ட ஆடிஷனுக்கு பிறகு, இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி தான் பயிலும் அரசுப்பள்ளியில் உடையிலேயே இறுதிப் போட்டிக்கு சென்று பாடல் பாடி அசத்தினார். முதலில் கந்தன் கருணை என்ற படத்தில் இருந்து பி.சுசிலா குரலில் ஒலித்த பாடலான "குறிஞ்சியிலே பூ மலர்ந்து..." என்ற பாடலை பாடினார்.
தொடர்ந்து வேறொரு பாட்டை பாட நடுவர்கள் கூறியதால், நெருக்கு நேர் படத்தில் இருந்து ஆஷா போஸ்லே குரலில் ஒலித்த, "எங்கெங்கே...எங்கெங்கே..." என்ற பாடலை பாடி அரங்கை திகைக்க வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உடனடியாக அவரை நடுவர்கள் தேர்வு செய்து பாராட்டினர். தற்போது மாணவியின் அசத்தலான பாடல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மாணவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அரசுப் பள்ளி மாணவி யோக ஶ்ரீ மற்றும் ஆசிரியை மகேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.