பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப்பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு சார்பில் வெளியாகும் அறிவிப்புகள், கடிதங்கள் அனைத்தும் இந்தியிலேயே வெளியாகிவருகிறது.
அந்த வகையில் ஹிந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஹிந்தியில் கடிதங்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், தான் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு கேரள MP ஜான் பிரிட்டாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ரயில்வே செயல்பாடுகள் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு இந்தியில் பதில் கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஜான் பிரிட்டாஸ், ஒன்றிய அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்புவதை ஒன்றிய அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டிந்ததாகவும், ஆனால், அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு இந்தியில் பதில் கடிதம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு மலையாளத்தில் கடிதம் அனுப்பும் கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும் ஜான் பிரிட்டாஸ் பதிவுட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் இந்திய கடிதம் அனுப்புவதற்கு திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.யும் தனது எதிர்ப்பு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.