மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.
எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், எப்போதும் குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பேன் என சரத்பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சரத்பவார் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், ” நான் கண்ணீருடன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி வாக்கு சேகரிப்பேன் என அஜித் பவார் கூறியுள்ளார். நான் எனது குடும்பத்தை பிரித்தேன் என்று அவர் கூறியுள்ளார். எனது குடும்பத்தில் நான்தான் மூத்தவன்.நான் எப்போதும் குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பேன்.
எங்களது கட்சி ஆட்சியிலிருந்தபோது கூட எனது மகள் சுப்ரியாவை எந்த பதவியிலும் நியமிக்கவில்லை. அப்போது அஜித்பவாருக்குத்தான் நான்கு முறையும் பதவியைக் கொடுத்தேன். குடும்பத்தைப் பிரிக்க எனக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.