நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து சிபிஐ விசாரணை செய்து நீட் தேர்வுத்தாள் கசிவை உறுதி செய்தனர். மேலும் இது குறித்த முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட் தேர்வு நடைமுறைகளை மாற்றியமைக்கவும், தேசிய தேர்வு முகமையையை சீரமைக்கவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் குழு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தீர்வினை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும்.
தேசிய தேர்வு முகமை பாதுகாப்பான தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் நீட் தேர்வை நடத்த வேண்டும். தனியார் பள்ளி கல்லூரிகளை தேர்வு மையங்களாக பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்
நீட் தேர்வுக்கான பார்வையாளர்கள், தேர்வாளர்களாக தனியார் நபர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் நிரந்தரமான அதிகாரிகளை, ஊழியர்களை நியமிக்க வேண்டும்
+2 வகுப்பில் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வான மாணவர்கள் மீண்டும் நுழைவு தேர்வு என்ற பெயரில் ஏன் அனைத்து பாடங்களிலும் நுழைவு தேர்வினை எழுத வேண்டும். இதனை முறைபடுத்த வேண்டும்.
+2 தேர்வில் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள். பிறகு ஏன் அவர்கள் நுழைவுத் தேர்வில் மீண்டும் 6 பாடங்களில் தேர்வினை எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு என்பது கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு பொதுத் திறன், சில பாடங்களில் அறிவை சோதிப்பதாக இருந்தால் மட்டும் போதுமானது.
பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை (JEE Main, JEE Advanced) நடத்துவது போல் நீட் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தலாம் போன்றவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.